பெரும்புதூரில் பூட்டியே கிடக்கும் ராமானுஜர் மணி மண்டபம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

பெரும்புதூர், மார்ச் 26:  பெரும்புதூர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த  ஆதிகேசவ பெருமாள் மற்றும்  ராமானுஜர் கோயில் உள்ளது.  ராமானுஜரின் புகழை போற்றும் வகையில் 2017ம் ஆண்டு ராமானுஜரின் 1000வது ஆண்டு அவதாரத் திருவிழாவின் போது ராமானுஜரின் நினைவு கூரும் வகையில் பெரும்புதூர் பகுதியில் மணிமண்டபம் கட்டப்படும் என இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி பெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் சுமார் 2.77 ஏக்கர் பரப்பளவில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ₹6.68 கோடி மதிப்பீட்டில் 2021ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வேதபாட சாலை, மாணவர் தங்கும் விடுதி, அன்னதான கூடம், ராமானுஜர் வரலாற்று தகவல் மையம், சிறிய குளம், நூலகம், ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. பின்னர் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கபட்டது. திறக்கப்பட்டு ஓரிரு மாதங்கள் மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடபட்டது. தற்போது இந்த மணிமண்டபம் பூட்டியே கிடக்கிறது. கடந்த பல மாதங்களாக இராமானுஜரின் மணிமண்டபம் பூட்டப்பட்டுள்ளதால் வளாகம் முழுவதும் புதர்மண்டி காடுபோல் காட்சியளித்து வருகிறது. மேலும் வரும் ஏப்ரல் மாதம் ராமானுஜரின் 1006வது ஆண்டு உற்சவம் துவங்க உள்ளது. இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பெரும்புதூர் பகுதியில் தங்கி விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். எனவே  ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் பூட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post பெரும்புதூரில் பூட்டியே கிடக்கும் ராமானுஜர் மணி மண்டபம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: