மான்கள் பலியாவதை தடுக்க வெள்ளைமலையில் தண்ணீர் தொட்டி: கிராம மக்கள் வலியுறுத்தல்

சிவகங்கை: சிவகங்கை அருகே வெள்ளை மலையில் வசிக்கும் மான்களுக்கு மலைப்பகுதிக்குள் குடிநீர் தொட்டி அமைத்து அவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை அருகே மலம்பட்டி, மலைஅழச்சிப்பட்டி, திருமண்பட்டி, வலையராதினிப்பட்டி, திருமலை பகுதிகளில் தொடர்ச்சியாக வெள்ளை மலை காணப்படுகிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் புதர்கள், மரங்கள் உள்ளிட்ட காடுகளை கொண்ட இம்மலை மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்கையில் உள்ளது. இங்குள்ள காடுகளில் நூற்றுக்கணக்கான புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. இங்கு பெரிய மரங்களுடன், பல மீட்டர் நீள அகலம் கொண்ட செடிகளுடன் புதர்களும் காணப்படுவதால் விலங்குகள் மறைந்து கொள்வதற்கு வசதியாக உள்ளன. இதனால் இப்பகுதியில் மான்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த வனப்பகுதி முழுவதும் தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு காணப்படும் மான்களை பாதுகாப்பதற்கு மற்ற வனப்பகுதியில் உள்ளது போன்ற வசதிகள் இல்லை.

இங்கு கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி வறட்சி நிலவியதாலும், காடுகளில் நீர் மற்றும் மான்களுக்கு தேவையான உணவு கிடைக்காததால் மான்கள் காடுகளை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வருகின்றன.

கோடை காலங்களில் இவ்வாறு காடுகளை விட்டு வெளியேறி சாலைகளை கடக்கும் போது வாகனங்களில் அடிபடுவது, நாய்கள் கடித்து பாதிப்படைவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது.

அதிகாலை 5 மணி முதல் மான்கள் காடுகளை விட்டு வெளியேறி கிராமங்களுக்கு வருகின்றன. இதனால் இப்பகுதி கிராம மக்கள் மான்கள் குடிக்கும் வகையில் அதிகாலை நேரத்தில் வீடுகளுக்கு வெளியே உள்ள சிமெண்ட் தொட்டிகள், பெரிய பாத்திரங்களில் நீர் வைக்கின்றனர்.  நீர் அருந்தி முடிந்த பின்னர் காடுகளுக்குள் அவற்றை விரட்டுகின்றனர். எனவே மான்கள் நீருக்காக காடுகளை விட்டு வெளியேறாத வகையில் தொட்டிகள் அமைத்து நீர் தேக்கி வைக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கிராமத்தினர் கூறியதாவது, மான்கள் காடுகளை விட்டு வெளியேறுவதால் விபத்துகள் மற்றும் நாய்களினால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. வெள்ளைமலையில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள தொட்டிகள் சிதைந்த நிலையில் உள்ளன. எனவே புதிய தொட்டிகள் அமைத்து நீர் தேக்கவும், அவைகளுக்கு உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories: