17 ஆண்டு சஸ்பெண்ட் வாழ்க்கையை அனுபவித்து முடித்தும் போலீஸ் அதிகாரியை விடாது துரத்தும் ‘கர்மா’: காரில் வெடிபொருள், ரூ.100 கோடி மாமூல் வழக்கில் ‘டிஸ்மிஸ்’

மும்பை: மும்பையில் மர்ம வெடிகுண்டு கார், ரூ.100 கோடி மாமூல் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். வேறொரு வழக்கில் 17 ஆண்டுகாலம் சஸ்பெண்டை அனுபவித்த நிலையில், அவரது கர்மா அவரை துரத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் கடந்த பிப். 25ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரேன் மர்மமான முறையில் உயிரிழந்தார். திடீர் திருப்பமாக மன்சுக் ஹிரேனின் காரை மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வஜே பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) சச்சின் வஜேயை கைது செய்தனர். மர்ம கார் விவகாரம் குறித்து என்ஐஏ விசாரித்து வந்த நிலையில், அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள மதுபான விடுதிகள், உணவகங்களில் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங் குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தனது உள்துறை அமைச்சர் பதவியை அனில் தேஷ்முக் ராஜினாமாக செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பரம்வீர் சிங்கின் குற்றச்சாட்டு தொடர்பாக சச்சின் வஜேயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், வெடிகுண்டு வழக்கு, ரூ.100 கோடி மாமூல் வழக்குகளில் தொடர்புடைய சச்சின் வஜேவை பணியில் இருந்து நீக்குவதற்கான உத்தரவை மும்பை நகர போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், ‘சச்சின் வஜேவை பதவி நீக்கம் செய்ய அரசியலமைப்பின் 311 (2)வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டுக்கு ஆளான சச்சின் வஜே, தன் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை நிரூபிக்கும் வரை அவர் அந்த பதவியில் தொடர அனுமதிக்க முடியாது. அவர் மீதான குற்றங்கள் கடுமையானவையாக உள்ளதால், அவர் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும். சச்சின் வஜேவுக்கு எதிராக சாட்சி கூறுபவர்கள் அவரைக் கண்டு பயப்பட வாய்ப்புள்ளதால், அவர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே 2002ம் ஆண்டு குண்டுவெடிப்பு குற்றவாளி குவாஜா யூனுஸின் காவல் மரணத்தில், சச்சின் வஜேவுக்கு தொடர்பு இருப்பது உறுதியானதால், அவர் 17 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலேயே இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணியில் மீண்டும் சேர்ந்தார். தற்போது மர்ம வெடிகுண்டு கார், ரூ. 100 கோடி மாமூல் போன்ற வழக்குகளில் சிக்கிய சச்சின் வஜே, சஸ்பெண்டுக்கு பதிலாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ கூறப்படும் சச்சின் வஜேவின் கர்மா, பல ஆண்டுக்கு பின்னும் அவரை பின்தொடர்வதாக சக போலீஸ் அதிகாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Related Stories:

>