திருவலம் பொன்னையாற்று பகுதியில் வீசப்பட்டுள்ள கோழி இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவலம் : திருவலம் பேரூராட்சி பொன்னையாற்று பகுதியில் கோழி இறைச்சி கழிவுகள் வீசப்பட்டுள்ளதால் துர்நாற்றமுடன் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், திருவலம் பேரூராட்சியில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியினரின் பயன்பாட்டிற்காக திருவலம் பஸ்நிலையம், மேட்டுபாளையம், பொன்னை கூட்ரோடு, சிவானந்தாநகர், இ.பி. கூட்ரோடு பகுதிகளில் கோழி இறைச்சி கடைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோழி இறைச்சி கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் இறைச்சி கழிவுகளை திருவலம் பொன்னை கூட்ரோடு பகுதியில் உள்ள பொன்னையாற்று பாலம் சென்னை-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையோரம் பொன்னையாற்றில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி வழியாக செல்பவர்கள் முகம் சுழிக்கும் அளவில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கழிவுகள் கொட்டப்படுவதால் அதில் இருந்து காகங்கள் இறைச்சி கழிவுகளை வீடுகளில் உள்ள மேல் நிலை நீர் தொட்டிகளில் போட்டு விட்டு செல்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால் அதில் இருந்து நாய்கள் கழிவுகளை எடுத்து வரும் போது சாலையின் குறுக்கே திடீரென அங்கும் இங்கும் ஓடி வருவதால் அவ்வழியாக பைக்கில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து பல்வேறு விபத்துக்களில் சிக்கி காயமடைந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: