ஆந்திராவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு!: தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோதுங்கள்... சந்திரபாபு ஆவேசம்..!!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் திருப்பதி மக்களவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமியை ஆதரித்து அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் கிருஷ்ணாபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் உரையாற்றி கொண்டிருந்த போது மர்மநபர்கள் சிலர் அவர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

அச்சமயம் சந்திபாபுநாயுடு கீழே குனிந்து கல்வீச்சில் இருந்து தப்பித்தார். இந்த கல்வீச்சில் தொண்டர் ஒருவர் காயம் அடைந்தார். தொடர்ந்து, திட்டமிட்டே தன் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கற்களை வீசியவர்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் ரவுடிசம் அதிகரித்திருப்பதற்கு இதுவே ஒரு நேரடி சாட்சி என்று கூறிய அவர், மக்கள் மீது ஏன் கற்களை வீசி தாக்குதல் நடத்துகிறீர்கள்; தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வந்து மோதுங்கள் பாப்போம் என்று சவால் விடுத்தார்.

தொடர்ந்து, கற்களை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சந்திரபாபு நாயுடு அங்கேயே சாலை மறியலிலும் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: