தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் சுமார் ரூ.1 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றால் 200 ரூபாய், எச்சில் துப்பினாலோ, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினாலோ தலா 500 ரூபாய், விதிமீறும் கடைகளுக்கு 5000 ரூபாய் என அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி முகக்கவசம் அணியாமல் சென்றதாக சென்னையை தவிர்த்து பிற நகரங்களில் நேற்று ஒரே நாளில் ரூ.89,61,300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததிற்காக ரூ.8,51,800 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் முகக்கவசம் அணியாததிற்காக இதுவரை 1.30 லட்சம் வழக்குகளும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கத்திற்காக இதுவரை 6,465 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கடந்த 4 நாட்களில் 2,351 பேர் மீது வழக்கு பதிவு செய்து மாநகர போலீசார் ரூ.4,44,600 அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பொதுமக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் தமிழகம் அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், கூட்டமாக செல்ல கூடாது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது.

Related Stories: