மருதங்காவெளி அய்யாநகர் பகுதியில் பூட்டிக்கிடக்கும் பொது சுகாதார வளாகம்: பேரூராட்சி கவனிக்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பேரூராட்சி 1வது வார்டு மருதங்காவெளி அய்யா நகர் பகுதியில் பேரூராட்சியால் பூட்டப்பட்டு கிடக்கும் பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 1வது வார்டு மருதங்காவெளி அய்யா நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பேரூராட்சியின் குடிநீர் வசதி, போதிய சாலை வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் போதியஅளவில் இல்லை என கூறப்படுகிறது. மேலும் இப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்ததால் அவர்கள் வசதிக்காக பேரூராட்சி சார்பில் கடந்த 2012 ஆண்டு நபார்டு திட்டம் 2012-2013ம் ஆண்டு ரூ.12லட்சம் நிதியில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதில் ஆண்களுக்கு என்று குளிக்க மற்றும் இயற்கை உபாதை கழிக்க, சிறுநீர் கழிக்க தனித்தனி வசதிகள், அதேபோன்று பெண்களுக்கும் தனிவசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் பல ஆண்டுகளாக பொதுசுகாதார வளாகம் திறக்கப்படாமல் இருந்ததை அந்த நேரத்தில் தினகரனில் செய்தி வெளிவந்ததால் திறந்து பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் அதனை பேரூராட்சி பணியாளர்கள் முறையாக பராமரிக்காததால் வீணாகி சேதமாகியது. அதன்பின்னர் நிதி ஒதுக்கீடு செய்து சீரமைத்தனர். மீண்டும் சில ஆண்டில் சேதமாகியது. இதுகுறித்து 2019ம் ஆண்டு தினகரனின் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து கடந்த 2019-2020ம் ஆண்டு பேரூராட்சியின் பொது நிதியில் பணம் ஒதுக்கீடு செய்து மீண்டும் சீரமைக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வரை அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் வேறு வழியின்றி அப்பகுதியில் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

ஆகவே இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் இந்த சுகாதார வளாகத்தை பராமரிக்க பணியாளர் நியமித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று இப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில், நாங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமம் அடைகிறோம் பெண்கள், வயதுக்கு வந்த பெண்கள், மாற்றுதிறனாளிகள், முதியோர்கள் சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து பேரூராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. இனியும் நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என்றால் இப்பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Related Stories: