வெயில், பூச்சிகள் தாக்குதலால் மா விளைச்சல் கடும் பாதிப்பு: விவசாயிகள் கவலை

வேலூர்: பூச்சி, வெயில் தாக்கம் காரணமாக பிஞ்சுகள் உதிர்வதால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முக்கனிகளில் முதல் இடம் பிடித்து இருப்பது மாம்பழம். அதுவும் சேலம் மல்கோவா மாம்பழம்என்றால் அதற்கு தனி சிறப்பு உண்டு. குறிப்பாக  சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் மாம்பழம் உற்பத்தியாகிறது. ஆண்டுதோறும், ஜனவரி மாதம் பூத்து கோடை விடுமுறை நாட்களில் மாம்பழம் சீசன் களைகட்டும். இந்த ஆண்டு தமிழகத்தில் பொதுமான அளவு பருவமழை பெய்ததால் மா விளைச்சல் அதிகரிக்கும் என்று  விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.  

குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பூச்சி தாக்குதல் ஏற்பட்டதால் பெருமளவு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. பனிபொழிவு, வெயில், பூச்சி தாக்குதல் என பல்வேறு நிலைகளில் மாமரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் பிஞ்சுகள் உதிர்ந்து விடுகிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்குள் வெயிலின் தாக்கம் 110 டிகிரி தொட்டுள்ளது. பாசனம் வசதி உள்ள மாமரங்களில் மட்டுமே ஒரளவுக்கு விளைச்சல் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மா உற்பத்தி முக்கிய இடம் பிடித்து வருகிறது. இந்தாண்டு பனிப்பொழிவு காரணமாக மாம்பூக்கள் பெரும்பாலும் கருகிவிட்டது.

மேலும் தேன்வண்டு என அழைக்கப்படும் தத்துப்பூச்சி தாக்குதலால் மாமரங்களில் பிஞ்சுகள் கருகி கொட்டுகின்றன. இதனை தவிர்க்க தோட்டக்கலைத்துறையினர், விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதில்லை. இதனால், தனியார் உரக்கடைகளில் மரங்களில் உள்ள நோய்கள் குறித்து நாங்கள் எடுத்துக்கூறி மருந்துகளை வாங்கித் தெளிக்க வேண்டிய நிலை நீடிக்கிறது.  மேலும் சீசனில் பூ எடுத்துள்ள மரங்களில் தற்போது வெயிலின் தாக்கத்தால் மா பிஞ்சுகள் உதிர்ந்து விடுகின்றன. வருங்காலத்தில் வெயில் அதிகளவில் இருக்கும் என்பதால் மேலும் மா விளச்சல் கடுமையாக பாதிக்கும். இதனால் விவசாயிகளின் வருமானம் பெரிதும் பாதிப்படையும்.

இந்த ஆண்டு மட்டும் மாமரங்களுக்கு இதுவரை 4 முறை மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. இதற்கே பாதி செலவிட வேண்டி உள்ளது. செலவு செய்த காசு கூட வருமா என்பது சந்தேகம் தான். எனவே வருங்காலத்தில் மா உற்பத்தியை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: