குடியாத்தம் அருகே செக்யூரிட்டி கொலை கள்ளக்காதலுக்கு இடையூறால் தலையில் கல்வீசி கொன்றோம்: மனைவி, கள்ளக்காதலன் வாக்குமூலம்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே செக்யூரிட்டி கொலையில் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தலையில் கல்வீசி கொலை செய்ததாக இருவரும் ஒப்புக்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(45), செக்யூரிட்டி வேலை செய்து வந்தார். இவரது மனைவி கல்யாணி. இருவரும் குடியாத்தம் அடுத்த தண்ணீர்பந்தல் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரவு கல்யாணி ராமாலையில் உள்ள மகள் கலையரசி வீட்டுக்கு சென்றார். மறுநாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கோவிந்தராஜ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கல்யாணி, கோவிந்தராஜ் உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊரான ஆம்பூர் அடுத்த கென்னடி குப்பத்திற்கு கொண்டுசென்றார். அப்போது கோவிந்தராஜின் முகம் சிதைந்து இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், பரதராமி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கல்யாணியும், ராமாலை கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்  நித்யானந்தம் என்பவருக்கு சேர்ந்து கோவிந்தராஜியை கொலை செய்தது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.  

அப்போது கல்யாணி, நித்யானந்தம் ஆகியோர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணிக்கும், கோவிந்தராஜிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்யாணி கணவரை பிரிந்து ராமாலை கிராமத்திற்கு சென்று இட்லி வியாபாரம் செய்து தனியாக வசித்து வந்தார். அப்போது கல்யாணி, அதே கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நித்யானந்தம் என்பவரை, இட்லி கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதற்காக அடிக்கடி அழைத்துசென்றுள்ளார். இதனால் கல்யாணிக்கும், நித்யானந்தத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. சில மாதங்களுக்கு முன் கல்யாணி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். அதேநேரம் அடிக்கடி கள்ளக்காதலனையும் சந்தித்து வந்துள்ளார்.

இதையறிந்த கோவிந்தராஜ், கல்யாணியை கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள தனது கணவரை கொல்ல கல்யாணியும், அவரது கள்ளக்காதலன் நித்யானந்தமும் திட்டமிட்டனர். அதன்படி கடந்த 4ம் தேதி இரவு கோவிந்தராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவு கல்யாணி, நித்யானந்தம் ஆகிய இருவரும் நள்ளிரவு  தூங்கிக்கொண்டிருந்த கோவிந்தராஜின் தலையில் கல் வீசி கொலை செய்துவிட்டு தப்பிசென்றனர். பின்னர் கணவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளனர். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முரளிதரன் மற்றும் போலீசார் கல்யாணி, நித்தியானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: