தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 10 நாட்களாக சீரான மின் சப்ளை இல்லாமல் பொதுமக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகள் மூலம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர், தெரு விளக்கு ஆகிய அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் 25 திறன் கொண்ட மின்மாற்றி பழுதானது.

இதன்காரணமாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு சரியான முறையில் மும்முனை மின்சாரம், இருமுனை மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் சரியான முறையில் மின்சாரம் வழங்கப்படாததால் கிராம மக்களுக்கு குடிநீர் இயக்கக்கூடிய ஆபரேட்டர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், திடீரென மின்சாரம் அதிகளவில் வருவதால் மின் மோட்டார்கள் பழுதாகிறது. அதை சரி செய்வதற்கு ஊராட்சியில் சரியான முறையில் பணம் இல்லாததால் ஊராட்சி மன்ற தலைவர்கள் கவலையடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தண்டராம்பட்டு பகுதியில் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து சே.ஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் குப்பன் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீருக்காக சொந்த செலவில் ஜெனரேட்டர் வரவழைத்து அதன்மூலம் மின்மோட்டார் இயக்கி அப்பகுதியினருக்கு குடிநீர் வினியோகம் செய்தார். இதனால், அப்பகுதியினர் நிம்மதியடைந்தனர். அதேபோல், சீரான மின்சாரம் சப்ளை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை நீடித்து வருகிறது.

Related Stories: