கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 10% விலை தள்ளுபடி: புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவிப்பு

புதுச்சேரி: கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சாப்பிடும் உணவு விலையில் 10% தள்ளுபடி செய்யப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரசின் 2வது அலையில், நாடு முழுவதும் பாதிப்பும், பலியும் தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.67 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொற்று பரவல் தினமும் உச்சம் தொட்டு வருவதால் பலரும் தடுப்பூசி பக்கம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், ஊடகத்துறையினர் முன்களப்பணியாளர்கள் பிரிவில் வருவர். பின்னர் 60 வயதுக்கு அதிகமானவர்களுக்கும், 45 வயதுக்கு அதிகமான இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது தொடங்கப்பட்டது. அதன்பிறகு 45 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. விரைவில் 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சாப்பிடும் உணவு விலையில் 10% தள்ளுபடி செய்யப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அச்சங்கம் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி உணவு விடுதிக்கு வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காட்டினால் அவர்கள் சாட்டப்பிடும் உணவிற்கு 10% விலை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: