கொரோனா தோல்வியை மறைக்க தடுப்பூசி தட்டுப்பாடு என பீதி கிளப்புவதா? மத்திய அமைச்சர் பாய்ச்சல்

புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தோல்வியை மறைக்க தடுப்பூசி தட்டுப்பாடு என பீதி கிளப்புவதா?’ என மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு உச்ச நிலையில் உள்ளது. இதற்கிடையே, மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது கைவசமுள்ள தடுப்பூசி இன்னும் 3 நாட்களில் தீர்ந்து விடும் நிலையில் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியிருந்தது. அதே போல், சட்டீஸ்கர், டெல்லி உள்ளிட்ட மாநில அரசியல் தலைவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பெரும் விவாதமாகி உள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று கூறியதாவது: தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. தடுப்பூசி தட்டுப்பாடு என மகாராஷ்டிரா அரசு கூறுவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அதன் தொடர் தோல்வியை மறைப்பதற்கான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. சட்டீஸ்கரில் அரசியல் தலைவர்கள் தவறான தகவல்களையும், தடுப்பூசி குறித்த பீதியையும் வழக்கமாக பரப்புகின்றனர். மாநில அரசுகள் தனது ஆற்றலை இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக அவர்களின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் செலுத்தினால் நல்லது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன், சுகாதார, முன்களப் பணியாளர்களுக்கு, முதியோருக்கு தடுப்பூசி போடுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஆனால், மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது பற்றிய தவகல்கள் முரண்பட்டதாக இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

* அரசு, தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி அளிக்க சிறப்பு முகாம்

தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும் விதமாக, வரும் 11ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் 100 பேருக்கு மேல் இருந்தால் தடுப்பூசி முகாம்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அது கூறியுள்ளது.

* ஒவ்வொரு இந்தியனுக்கும் தகுதியுண்டு

அனைவருக்கும் தடுப்பூசி என்ற பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று தனது டிவிட்டரில், ‘தேவைகள் குறித்து விவாதிப்பது நகைப்புக்குரியது. ஒவ்வொரு இந்தியனும் பாதுகாப்பான வாழ்க்கைக்கான வாய்ப்பை பெற தகுதியானவரே,’ என கூறி உள்ளார். பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில், ‘தேர்தலில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என அறிவித்தார்கள். இப்போது ஏன் எல்லோருக்கும் தர முடியவில்லை? நாட்டில் அனைவரும் தடுப்பூசி பெற வேண்டும்,’ என கூறியுள்ளார். 

Related Stories: