கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு

புதுடெல்லி: அசாமில் இறுதிகட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 3வது கட்டமாகவும், கேரளாவில் ஒரே கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், கேரளாவிலும் 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது. அங்கு இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜ கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற நிலையில், இம்முறை அதிக தொகுதிகளை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் களமிறங்கி உள்ளது. மொத்தம் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளிலும் 957 பேர் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அசாமில் ஏற்கனவே 2 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று 3வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் நடக்க உள்ளது. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் கடந்த 27ம் தேதி 47 தொகுதிகள், ஒன்றாம் தேதி 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இன்று 40 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு  பதிவு நடக்கின்றது. 25 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 337 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 11,401 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 78.75 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். வாக்குப்பதிவு மையங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. ஏற்கனவே இரண்டு கட்டமாக 60 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளது. மூன்றாவது கட்டமாக இன்று 31 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நடக்கிறது. மொத்தம் 205 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 78.5லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 618 கம்பெனி வீரர்கள் குவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 10,871 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துமே பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றது. பொதுமக்கள் முககவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: