கோரிக்கைகளை நிறைவேற்றாத விஜயபாஸ்கருக்கு எதிராக டாக்டர்கள் போர்க்கொடி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (6ம்தேதி) நடைபெறுகிறது. நேற்றுமுன்தினம் இரவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக மருத்துவர்கள் நேற்றுமுன்தினம் மாலை விராலிமலை தொகுதியில் பிரசாரம் செய்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மருத்துவர்கள் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தினோம். அப்போது முதல்வருடன் லண்டனுக்கு செல்லும் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், பிரச்னைகளை சரிசெய்வதாகவும் உத்தரவாதம் அளித்தார். இதனால் இந்த போராட்டத்தை கைவிட்டோம்.

ஆனால் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு மாறாக போராட்டத்தில் பங்கேற்ற ஆண், பெண் மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் குறிப்பாக பெண்கள் அவதிக்குள்ளாகினர். இடமாற்றம் செய்யப்பட்ட டாக்டர் லட்சுமி நரசிம்மன் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனார். இதுபோல் இடமாற்றம் செய்யப்பட்ட டாக்டர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு மனஉளைச்சலில் இருந்து வருகின்றனர். மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிய விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் விஜயபாஸ்கருக்க வாக்களிக்காதீர்கள். இவ்வாறு அவர்கள் பேசினர். சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக அவரது தொகுதியில் மருத்துவர்கள் பிரசாரம் செய்ததால் விஜயபாஸ்கர் கடும் அதிர்ச்சியில் உள்ளாராம்.

Related Stories: