தேர்தல் விதிமுறையால் வாணவேடிக்கை களை இழந்தது; நெல்லிகுளங்கரை பகவதி அம்மன் கோயில் திருவிழா: நெம்மரா, வல்லங்கி கிராமங்களில் பக்தர்கள் குவிந்தனர்

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெம்மாரா, வல்லங்கி நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோயில் திருவிழா கொரோனா மற்றும் சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நேற்று மிகவும் எளிய முறையில் நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் 20வது நாள் நெல்லிக்குளங்கரை பகவதி அம்மனுக்கு நெம்மரா, வல்லங்கி இரண்டு கிராம மக்கள் திருவிழா எடுப்பது வழக்கம். 2 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவின்போது பட்டாசு வெடிப்பது பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியாகும்.

இரு கிராமத்தினரும் போட்டி, போட்டு கொண்டு வெடிக்கும் வண்ண,வண்ண வாணவேடிக்கைகளை காண தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை ஆகிய பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் இருந்தும் கூட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வயல்வெளியில் இரவு முழுவதும் திரண்டிருப்பர். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது. இம்முறை கொரேனாவின் 2வது அலை மற்றும் தேர்தல் நடத்தை முறை காரணமாக திருவிழா மிகவும் எளிய முறையில் நடைபெற்றது.

வழக்கமாக இரு கிராமங்களிலும் தலா 11 யானைகள் வீதம் 22 யானைகள் அணிகலன் அணிந்து திருவீதி உலா வரும். ஆனால் இந்தாண்டு தலா 5 யானைகள் வீதம் 10 யானைகள் மட்டும் திருவீதி உலா பங்கேற்றன. நேற்று கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மாலை பட்டாசு திருவிழா துவங்கியது. ஆனால் பக்தர்கள் எதிர்பார்த்த அளவிற்கு தொடர்ந்து பட்டாசு வெடிப்பது குறைக்கப்பட்டு, வீரியம் குறைந்த பட்டாசுகள் சிறிதளவு வெடிக்கப்பட்டது. இருப்பினும் ஆயிரக்கணக்கானோர் வயல்வெளிகளில் அமர்ந்து வாண வேடிக்கைகளை கண்டு ரசித்தனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories: