முத்துமாரியம்மன் கோயில் விழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 19ம் தேதி வெள்ளிக் கிழமை கொடி ஏற்றத்துடன் துவங்கிய இத்திருவிழா 16 நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.

நேற்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். இன்று அக்கினி சட்டி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், பால்குடம், பூப்பெட்டி, கரும்பாலை தொட்டில், பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கியமாக, ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.

இவ்வாறு பூசுவதால் உடலில் உள்ள நோய்கள் தீரும் என்பது ஐதீகம். விழாவை காண சென்னை, காரைக்குடி, மதுரை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் க்ஷத்திரிய நாடார் உறவின் முறை செய்து வருகிறது.

Related Stories: