பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டருக்கு 7 ஆண்டு சிறை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர் மற்றும் அவரது தாயாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வந்தவர் மரியனோ ஆன்டோ புருனோ (36). இவருக்கும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்த அமலி விக்டோரியா (32) என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதனையடுத்து மாமியர், மாமனார், கணவருடன் அமலி வாழ்ந்து வந்துள்ளார். திருமணமாகி ஒரு வருடம் வரை தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால், மாமனார், மாமியார் மற்றும் கணவர் ஆகிய 3 பேரும் அமலியை குழந்தை இல்லை என்று கூறி கொடுமை செய்து, நீ செத்துபோ என்று திட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து 2007ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், அமலி தாய் வீட்டிற்கு சென்று மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

 அப்போது, அவரின் தாய் என் மகளை கஷ்டப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு மாமியார், நீ அதெல்லாம் சொல்லக்கூடாது என்று திட்டியுள்ளார். சில நாட்களில், உடல்நிலை சரியில்லாத போது வேலை செய்ய சொல்லியும், அமலி பெயரில் உள்ள சொத்துகளை தங்கள் பெயரில் எழுதி வைக்க சொல்லியும் துன்புறுத்தி, தாக்கியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான டாக்டர் அமலி கடந்த 5.11.2014 அன்று வேலையில் இருந்து வந்த பிறகு, பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இறந்த அமலியின் கணவர் மற்றும் மாமியார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: