தேர்தல் ஆணையம் கெடுபிடி எதிரொலி: கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனை பாதியாக சரிந்தது

ஈரோடு: ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துவர தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால் ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனை பாதியாக குறைந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைசாவடி அருகே வாரந்தோறும் வியாழன் அன்று மாட்டு சந்தை நடைபெறும். ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள், சேலம், நாமக்கல், கரூர் போன்ற இடங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம். தமிழகம், கேரளா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கையில் பணம் எடுத்து செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், அனைத்து சோதனைசாவடிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை நடத்தி, உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து வரும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகளவில் இருந்தது. ஆனால், தேர்தல் பறக்கும் படையினர் கெடுபிடி காரணமாக வெளி மாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்தனர். இதனால், நேற்று கூடிய சந்தையில் மாடுகள் விற்பனை பாதியாக குறைந்ததால், மாடு விற்பனை செய்ய வந்த வியாபாரிகளும், விவசாயிகளும் கவலை அடைந்தனர்.

Related Stories: