மகாராஷ்டிரா மாநில அமைச்சர் மீது மாமூல் புகார்: விசாரணையை நடத்த தேவேந்திர பட்னவிஸ், ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து மனு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பையில் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்கச் சொன்னதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு விரிவான அறிக்கையை அனுப்பி வைக்க வலியுறுத்தி முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இன்று மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து மனு அளித்துள்ளார்.

மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த காரின் உரிமையாளரான மான்சுக் ஹிரன், தானே பகுதியில் உள்ள நீர்நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஹிரன் மரண வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவும் வெடிபொருள் நிரப்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கை என்ஐஏயும் விசாரித்து வருகின்றன.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஹிரன் அந்தக் காரை நிறுத்திவிட்டு மற்றொரு காரில் தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. அந்த காரை சச்சின் வாஸ் பயன்படுத்தியதும், சச்சின் வாஸை என்ஐஏ அதிகாரிகள் கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். மேலும் காவலர் வினாயக் ஷிண்டே மற்றும் நரேஷ் தாரே ஆகிய இருவரும் ஹிரன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் கடந்த 18-ம் தேதி ஊர்க்காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் பரம் வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். 8 பக்கங்களைக் கொண்ட அக்கடிதத்தில் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிடபட்டிருந்தது.

குறிப்பாக மும்பையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பார்களில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை வசூலிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என கூறப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலை உண்டாக்கியது. மகாராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்ட ம் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் அக்கட்சியினர் ராஜ்பவனில் இன்று சந்தித்தனர். அப்போது மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பையில் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்கச் சொன்னதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதுபற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனதேவேந்திர பட்னவிஸ் தலைமை வலியுறுத்தினர். மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு விரிவான அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மனு அளித்தார்.

Related Stories: