மார்ச் 28-29ம் தேதிகளில் ஹோலி பண்டிகை கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும்: அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவுரை

புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என டெல்லி சுகாதார அமைச்சர்  சத்யேந்திர ஜெயின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஹோலி  பண்டிகையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆக்டிவ் நோயாளிகளாக தற்போது 3,618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு, ேநாய் தொற்று பாசிட்டிவ் விகிதமும் ஓரு சதவீதத்தை கடந்துள்ளது. இதையடுத்து, டெல்லி அரசு ேநாய் தொடர்பு தடமறிதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், வரும் 28-29 ம் தேதிகளில் மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அமைச்சர் ஜெயின் மேலும் கூறியதாவது: கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு டெல்லியில்  உள்ள அரசு மருத்துவமனைகள் புறநோயாளிகள் மருத்துவமனைகளை அணுக வேண்டிய நேரம் குறித்து பரிசீலித்து  வருகிறோம். மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். முககவசங்களைகட்டாயம் அணிய வேண்டும். முககவசம் இல்லாமல் சுற்றுவோர் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த மாதம் இறுதியில் ஹோலி பண்டிகை வருவதால் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். கொண்டாட்டங்களின்போது கோவிட் தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் நோய் தொடர்பு தடமறிதல் மற்றும் பரிசோதனைகளை வேகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜெயின் தெரிவித்தார். டெல்லியில் தற்போது கோவிட் பாதிப்பின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6,47,984 ஆக உயர்ந்துள்ளது. நோயிலிருந்து முழு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6.32 லட்சமாக உள்ளது. கடந்த சனிக்கிழமையன்று 813 பேரும், வெள்ளிக்கிழமையன்று 716 பேரும், வியாழயன்று 607, புதன் கிழமை 536 மற்றும் செவ்வாயன்று 425 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: