ஆண்டியப்பனூர்-லாலாபேட்டை செல்லும் குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்து ஆண்டியப்பனூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனை சுற்றி லாலாபேட்டை, இருணாபட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இதில் குறிப்பாக ஆண்டியப்பன் ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாலாப்பேட்டை கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அடிப்படை தேவைகள் சாலை குடிநீர் வசதி மின்வசதி உள்ளிட்டவைகள் ஊராட்சி நிர்வாகம் சரிவர செய்து தரப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மருத்துவம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு செல்ல ஆண்டியப்பனூர், லாலாப்பேட்டை தார் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை தற்போது பழுதடைந்து குண்டும் குழியுமாக ஆங்காங்கே உள்ளது. மேலும், இரவு மற்றும் பகல் நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் கர்ப்பிணிகள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக இந்த சாலையை செல்ல முடியாத சூழல் உள்ளது.

இதனால் பல்வேறு உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி பல முறை அப்பகுதி மக்கள் கலெக்டர், ஊராட்சி நிர்வாகம் மற்றும் முதல்வர் தனிப்பிரிவு போன்றவற்றிக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அப்பகுதியினர் விசாரித்ததற்கு, இச்சாலை சீரமைக்க ₹51 லட்சம் திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை என்று ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும், ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்கள் அப்பகுதி சாலையை சீரமைத்தால் மட்டுமே வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர்.மேலும், ஆண்டியப்பனூர்- லாலாப்பேட்டை சாலையை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: