பழநியில்தான் இந்த கூத்து காரில் வந்து நாய்களை திருடும் கும்பல்-உயர்ரகம் வளர்ப்பவர்கள் உஷார்

பழநி : பழநியில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை காரில் வரும் மர்ம கும்பல் திருடிச் செல்வது அதிகரித்துள்ளது.

பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளின் பாதுகாப்பிற்காக நாய்கள் வளர்க்கப்படுகின்றன. பல வீடுகளில் உயர்ரக நாய்கள் வளர்க்கப்படுகின்றன. பழநியில் அண்ணா நகர், சண்முகபுரம், லட்சுமிபுரம், பழநியாண்டவர் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் விலை உயர்ந்த நாய்கள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. இந்த பகுதிகளை நோட்டம் விடும் மர்ம கும்பல் காரில் வந்து நாய்களை தூக்கிச் செல்வது தற்போது அதிகரித்து வருகிறது.

பழநி டவுன், சண்முகபுரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் நடராஜன் என்பவரது வீட்டில் உயர்ரகமான பக் வகை நாய் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நாயை நடை பயிற்சிக்காக அவிழ்த்து விட்டுள்ளனர். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் காரை நிறுத்தி, நாயை பின்தொடர்ந்து வந்து தூக்கிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன. சிசிடிவி பதிவில் நாயை கடத்திய கார் புதிய வகை மாருதி ஆல்டோ வகை என்பதும், காரினுள் பெண் ஒருவர் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த பகுதியில் ஏற்கனவே ராஜபாளையம், சிப்பிப்பாறை இன நாய்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளன. விலை உயர்ந்த வகை நாய்களை திருடும் கும்பல் அவற்றை கேரளாவிற்கு மொத்தமாக கொண்டு சென்று விற்று பணம் பார்க்கின்றனர். பழநி நகரில் நடந்த சாலைப்பணியால் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களின் வயர்கள் அறுந்து கிடப்பதால் காரில் எந்த பகுதியின் வழியாக சென்றது என்று கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பழநி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக நாயின் உரிமையாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: