'டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்போம்': சரத் கமல் உறுதி

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் 4வது முறையாக டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்குபெறும் சரத் கமல் மற்றும் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாக விளையாடவுள்ள சத்ய ஞாயசேகரன் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்போம் என உறுதி அளித்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 21ம் தேதி தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நடைபெறும் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காக கத்தார் தொகாவில் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் சரத் கமல் மற்றும் சத்ய ஞாயசேகரன் வெற்றிபெற்று சென்னை திரும்பினர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய ஞாயசேகரன், தன்னுடைய சிறுவயது கனவு நிறைவேறியதாக கூறினார். ஒற்றையர் பிரிவு மற்றும் முதல் முறையாக இரட்டையர் பிரிவில் தகுதி பெற்றிருக்கும் சரத் கமல் 4வது முறையாக ஒலிம்பிக்கில் விளையாடவுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இரட்டையர் பிரிவில் உறுதியாக தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக சென்னை விமான நிலையத்திற்கு அதிகாலை 3 மணிக்கு வந்த வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி கழக நிர்வாகிகள் மலர்க்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் சிறப்பான முறையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Stories: