கேரள கடல் எல்லையில் ஏகே 47 துப்பாக்கிகள், 300 கிலோ ஹெராயினுடன் படகுகள் சிக்கின: பாகிஸ்தானின் சதி என சந்தேகம்

திருவனந்தபுரம்: கேரள கடல் எல்லையில் ஏகே 47 துப்பாக்கிகள், குண்டுகளுடன் 3 படகுகள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில்  விழிஞ்ஞம் அருகே சில தினங்களுக்கு முன்பு 3 படகுகள் பிடிபட்டன. இதில் ஒரு படகில், பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் இருந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த கடலோர காவல்படை, அந்த படகில் இருந்த 6 பேரை கைது செய்தது. தற்போது அவர்கள் காவலில் விசாரிக்கப்பட்டு  வருகின்றனர். இதனால், இந்திய கடல் எல்லையில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்திய கடற்படையின் விமானம் மூலம் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, மினிகோய் தீவில் இருந்து 166 கி.மீ தொலைவில் 3 படகுகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்தன. கடற்படை வீரர்கள் விரைந்து சென்று, அந்த படகுகளை மடக்கி பிடித்தனர். அவற்றி–்ல ஒரு படகில் 5 ஏகே 47 துப்பாக்கிகள், ஆயிரம் துப்பாக்கி குண்டுகள், 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள் போன்றவை இருந்தன. அவற்றை கடற்படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த படகுகளில் இருந்தவர்களும் ைகது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட படகுகளை கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படகுகளில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினால் இது தொடர்பான மேலும் பல விபரங்கள் தெரியவரும்.

இவை பாகிஸ்தானில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டவை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படகில் சிக்கியுள்ள 300 கிலோ ஹெராயின் போதை பொருளின் சர்வதேச மதிப்பு பல நூறு கோடியை தாண்டும். இதனால், இந்த கடத்தலின் பின்னணியில் தீவிரவாதிகள் மற்றும் சர்வதேச சதி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: