நனவானது சிறுவயது கனவு: ஒலிம்பிக்கில் தமிழக வீரர் சத்யன்

தோஹா: டோக்கியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் ஒற்றையர் பிரிவில் விளையாட தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் தகுதிப் பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டி ஜூலை மாதம் டோக்கியோவில் தொடங்குகிறது. அதில் டேபிள் டென்னிஸ் பிரிவுகளில் விளையாடுவதற்கான ஆசிய அளவிலான தகுதிச்சுற்றுப் போட்டி கத்தாரில் உள்ள தோஹாவில் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் சத்யன் ஞானசேகரன் நேற்று பாகிஸ்தான் வீரர் முகமது ரமீசை எதிர்கொண்டார். அந்தப் போட்டியை 11-5, 11-8, 11-9, 11-2 என்ற புள்ளி கணக்கில் எளிதில் கைப்பற்றினார். அதனால் 4-0 என  நேர் செட்களில்  வென்றார்.

ஏற்கனவே முதல் போட்டியில் சக வீரர் சரத் கமலை 4-3 என்ற செட்களில் வென்றிருந்தார். இந்த வெற்றிகள் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை சத்யன் உறுதி செய்தார். ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் விளையாட அசாந்தா சரத் கமலை தொடர்ந்து சத்யனும் தகுதிப் பெற்றுள்ளார். இந்திய வீராங்கனைகள் மோனிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோரும் முதல்முறையாக ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாட தகுதிப் பெற்றனர்.

ஒலிம்பிக் கனவு

சத்யன்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அதிகாரபூர்வமாக தகுதிப்பெற்றுள்ளேன். சிறுவயது முதலே ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்ற கனவு உண்டு. அந்த கனவு நனவான தருணம் இது. பல ஆண்டுகள் மேற்கொண்ட போராட்டம், தியாகத்திற்கு பலன் கிடைத்துள்ளது.

Related Stories: