ஆரணியில் தொடரும் சுகாதார சீர்கேடு நீரேற்றும் அறை வளாகத்தில் நகராட்சி குப்பைகள் கொட்டி எரிப்பு-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆரணி : ஆரணியில் உள்ள 33 வார்டுகளில் நகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைத்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குப்பைகளை சேகரிக்க வார்டு 1 முதல் 18 வரை  தனியார் நிறுவனம் சார்பில் 116 தூய்மை பணியாளர்களும், 18 முதல் 33 வார்டு வரை நகராட்சி சார்பில் 88 தூய்மை பணியாளர்களும் வேலை செய்து வருகின்றனர்.

 மேலும், வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் என தரம் பிரிக்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில்  நுண்ணுயிர் உரம் தயாரிக்க கடந்த 2018ம் ஆண்டு ₹2.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, ஆரணி நகராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி, கமண்டல நாகநதி ஆற்றுப்பாலம், நீரேற்றும் நிலையம் அருகே, புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் அருகே, மாடு தொட்டி வளாகம் என 5 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும்  மைய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு, குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பல்வேறு வார்டுகளில் குப்பைகளை முறையாக அகற்றாததால் குப்பை தொட்டிகள் நிரம்பி சாலை ஓரங்களில் குப்பைக்கழிவுகள் குவிந்து கிடக்கிறது. மேலும், விஏகே நகரில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றுப்பாலம் அருகே நகராட்சி சார்பில் 5க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நீரேற்றும் நிலையத்தில் இருந்து நகராட்சிக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, நகராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சேகரித்து, வார்டுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.    

இந்நிலையில், நீரேற்றும் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கட்டிடத்திற்கு நகராட்சி வார்டுகளில் இருந்து கொண்டு செல்லப்படும் குப்பைகளை மக்கும், மக்கா குப்பைகளாக தரம் பிரித்து உரம் தயாரிக்காமல், நீரேற்றும் வளாகம் அருகே குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, ஆரணி நகராட்சிக்கு  நீர் ஆதாரமாக விளங்கி வரும் கமண்டல நாகநதியில் பல ஆண்டுகளாக குப்பைகளை கொட்டி எரிக்கப்பட்டு வருவதால்  குடிநீர் மாசடைவதுடன், சுவையும் மாறியுள்ளது  என பொதுமக்கள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் நீரேற்றும் அறை அருகிலேயும் தினமும் குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு மற்றும் குடிநீர் மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, கமண்டல நாகநதி ஆற்றுப்பாலம் நீரேற்றும் அறை அருகே அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பகுதியில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதை தடுத்து நிறுத்தவும், நீரேற்றம் அருகே கொட்டியுள்ள குப்பைகளை அகற்றவும், அனைத்து வார்டுகளிலும் முறையாக குப்பை தொட்டிகள்  வைத்து குப்பைகளை அகற்றவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: