மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்: திருச்சி சேதுராபட்டியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேர், ஒரு பேராசிரியருக்கு தொற்று பாதிப்பு உறுதி..!!

திருச்சி: கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் திருச்சி சேதுராபட்டியில் அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் 14 மாணவர்கள் மற்றும் ஒரு பேராசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 14 பேரும் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருச்சி சேதுராபட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சுமார் 270 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 14 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு கண்டறியப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ கல்வி இயக்குனரத்தின் இயக்குநர் டாக்டர். நாராயணபாபு மருத்துவர்களுடன் ஆலோசனை செய்தார். மேலும் கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாணவர்களுக்கு அடுத்து வழங்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொற்று பாதிப்புக்குள்ளான 15 பேரும் நலமுடன் இருக்கின்றனர். அவர்களுக்கு அறிகுறியற்ற தன்மையே தற்போது நிலவுகிறது. 15 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உள்ள மாணவர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்யவுள்ளோம் என குறிப்பிட்டார். தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காலை 11 மணிக்கு தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னையை தவிர மற்ற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்களுடன் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்க ஆட்சியர்களுக்கு செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: