திடீர் மழை காரணமாக 21 விமான சேவை பாதிக்கப்பட்டது: பயணிகள் கடும் அவதி

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 21 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று பிற்பகல் வரை கடுமையான கோடை வெயில் கொளுத்தி, மக்களை வாட்டி வதைத்து. இந்நிலையில், நேற்று மாலையில், திடீரென மேகங்கள் திரண்டு வந்து, மேகமூட்டத்துடன் ஒரு இருளான சூழ்நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடும் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கொட்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலைய பகுதிகளிலும் சூறைக்காற்றும், கொட்டும் மழையும் இருந்ததால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரும் அளவு பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு, கோவையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மாலை 5.15 மணிக்கும், மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் மாலை 5.25 மணிக்கும் என இந்த 3 விமானங்களும் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து மும்பை, மதுரை, பெங்களூரு, ஆகிய இடங்களில் இருந்து வந்த 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானிலே வட்டமடித்துக் கொண்டு இருந்தன. அதன்பின்பு அந்த விமானங்களையும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர்.

இதேபோல் சென்னையில் இருந்து புனே, மும்பை, ஐதராபாத், டெல்லி, கவுஹாத்தி, ராஞ்சி, விஜயவாடா, விசாகப்பட்டினம், மதுரை, புவனேஸ்வர், அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனையடுத்து, சென்னை விமான நிலைய பகுதியில் திடீரென சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் விமானங்கள் மற்றும் புறப்படும் விமானங்கள் என மொத்தம் 21 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், இது கோடை மழை தான். சிறிது நேரத்தில் ஓய்ந்து, வழக்கமான வானிலை நிலவ தொடங்கிவிடும். அதன் பின்பு விமான சேவைகள், சென்னை விமான நிலையத்தில், வழக்கம்போல் நடக்கும் என்றனர்.

The post திடீர் மழை காரணமாக 21 விமான சேவை பாதிக்கப்பட்டது: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: