போடுறா வெடிய… கொடுடா சுவீட்ட… பாஜ தோல்வியை கொண்டாடிய எச்.ராஜா

சென்னை: தமிழ்நாட்டில் பாஜ போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோற்ற நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரான எச்.ராஜா வீட்டில் பட்டாசு வெடித்து, சுவீட் கொடுத்து கொண்டாடினார். பாஜ முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா. இவர் கடந்த முறை (2019) சிவகங்கை எம்பி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த முறை தனக்கு சீட் கிடைக்குமென ஆவலோடு எதிர்பார்த்தார்.

ஆனால், சாரணர் தேர்தல் உட்பட பல தேர்தல்களில் அவர் தொடர் தோல்வி அடைந்து வந்ததால், தலைமை இம்முறை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து, சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பெயரளவில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் அவர் எங்கும் போகாமல் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.

தமிழகத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பல முக்கிய பிரமுகர்கள் தோல்வி அடைந்ததால், இங்குள்ள பாஜ தலைமை அலுவலகம் உட்பட கிளை அலுவலகங்களிலும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் பெரிய அளவில் ஈடுபடவில்லை. ஆனால், எச்.ராஜா மட்டும் சென்னையில் பாஜ தலைமை அலுவலகமான கமலாலயம் முன்பு வெடி வைத்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடியுள்ளார்.

இது பாஜ தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அண்ணாமலை மீதும், தனக்கு சீட் கொடுக்காத தலைமை மீதும் அதிருப்தியில் எச்.ராஜா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த எதிர்ப்பை காட்டவே எச்.ராஜா கொண்டாடியதாக கூறப்படுகிறது. ‘நம்ம தோத்ததுக்கு கொண்டாடுகிறாரா? இல்லை. இந்திய அளவில் பெற்ற இழுபறியான வெற்றிக்கு கொண்டாடுகிறாரா என தெரியவில்லையே…’ என அக்கட்சி தொண்டர்கள் முணுமுணுத்தனர்.

The post போடுறா வெடிய… கொடுடா சுவீட்ட… பாஜ தோல்வியை கொண்டாடிய எச்.ராஜா appeared first on Dinakaran.

Related Stories: