சின்னேப்பள்ளியில் எருது விடும் விழா கோலாகலம்-300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த சின்னேப்பள்ளி கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கிருஷ்ணகிரி அடுத்த சின்னதக்கேப்பள்ளி கிராமத்தில், எருது விடும் விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலமான ஆந்திராவில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதற்காக சாலையின் இருபுறங்களில் தடுப்புகள் கட்டப்பட்டு, அதன் இடையே எருதுகளை ஓட விட்டனர். குறிப்பிட்ட தூரத்தை, எந்த காளை குறைந்த நேரத்தில் ஓடி கடந்தது என்பதை கணக்கிட்டு, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

முதல் பரிசாக ₹25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ₹20 ஆயிரம், மூன்றாம் பரிசாக ₹15 ஆயிரம், நான்காம் பரிசாக ₹10 ஆயிரம், 5ம் பரிசாக ₹9 ஆயிரம் என மொத்தம் 55 காளைகளின் உரிமையாளர்களுக்கு சுமார் ₹3 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. விழாவினை காண கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் திரண்டனர். எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க, மகாராஜகடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர்  செய்திருந்தனர்.

Related Stories: