பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர டெல்லி அரசு சம்மதம்: சட்டசபையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவிப்பு

புதுடெல்லி,: பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர டெல்லி அரசு சம்மதம் தெரிவிப்பதாக சட்டசபையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார். டெல்லி சட்டப்பேரவையில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து விலை நிர்ணயிப்பது தொடர்பான விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராம்வீர்சிங் பிதூரி பேசுகையில்,’ பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் அதிக அளவு வாட் வரி விதித்ததால் தான் இந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து நிற்கிறது. எனவே ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து இதை  செய்தால் ஒரு லிட்டர் விலையில் ரூ.25 வரை குறையும்’ என்றார். இதற்கு பதில் அளித்த ஆம்ஆத்மி எம்எல்ஏ ராக்கி பிர்லா கூறுகையில்,’ இந்த விலை உயர்வுக்கு பா.ஜவும், மத்திய அரசும் தான் காரணம்’ என்றார். மற்றொரு ஆம்ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே பேசுகையில்,’ விலைவாசி விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் பாஜ தலைவர்கள் சரியான காரணத்தை கூறாமல் இந்த நடவடிக்கையை சரி என்று சொல்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வரும் பணத்தை கொண்டு தான் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் சாலை அமைத்ததாக கூறுகிறார்கள்.

 மத்திய அரசும் தனது அரசியல் ஆதாயத்திற்கு ஏற்றவாறு விலையை மாற்றி அமைத்து வருகிறது. இந்த விலை உயர்வின் மூலம் தான் மத்திய அரசு தனது அரசியல் ஆசைகளை நிறைவேற்றி வருகிறது. என்ன விலை கொடுத்தாலும் மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும்’ என்றார். ஆம்ஆத்மி எம்எல்ஏ சஞ்சய் ஷா பேசுகையில்,’ மக்களுக்கு எப்படி நிதியை திருப்பி அவர்களது பையில் வைக்க வேண்டும் என்பதை ஆம்ஆத்மி அரசை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ள வேண்டும். எனவே விலை உயர்வை குறைக்க வேண்டும்’ என்றார். இந்த விவாதத்திற்கு டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர்சிங் பதில் அளித்து பேசினார். அவர் கூறுகையில்,’ பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர டெல்லி அரசுக்கு சம்மதம் தான். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஏற்கனவே இதுதொடர்பாக பேசியுள்ளார். எனவே நீங்கள் மத்திய அரசை சந்திக்க ஒரு குழுவை ஏற்பாடு செய்தால் அதில் ஆம்ஆத்மி எம்எல்ஏக்களும் இணைந்து கொள்வார்கள். இந்த நடவடிக்கையால் டெல்லி மட்டுமல்ல நாடு முழுவதும் பயன் பெறும்’ என்றார்.

Related Stories: