தூர்தர்ஷன், ரேடியோவில் கட்சிகள் பிரசார நேரம் 2 மடங்காக அதிகரிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்தை ஒளி, ஒலிபரப்புவதற்கான நேரத்தை பிரசார் பாரதி இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 1998ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, அரசியல் கட்சிகள் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி, ரேடியோவை இலவசமாக பயன்படுத்தி கொள்ளும் முறை அறிமுகமானது. அதன் பிறகு, நடந்த அனைத்து மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் இது பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில், தேசிய கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளுக்கு 90 நிமிடங்கள், தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவின் பிராந்திய ஒளி, ஒலிபரப்பில் நேரம் ஒதுக்கப்படுகிறது. தற்போது தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 27ல் தொடங்கி ஏப்ரல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, நேரடி தொடர்பற்ற பிரசாரத்தை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் பிரசார் பாரதி நிறுவனத்துடன் கலந்து ஆலோசித்த தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் தேர்தல் பிரசார நேரத்தை, அந்த கட்சிகள் கடந்த தேர்தலில் எப்படி செயல்பட்டது என்பதன் அடிப்படையில், இரு மடங்காக நீட்டித்து வழங்க முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த போதும், தேர்தல் ஆணையம் இதே முடிவை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: