முல்லைப் பெரியாறு அணையின் துணைக் குழு கலைப்பு வழக்கு விசாரணை 16க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள துணைக் குழுவை கலைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கும் விதமாக துணைக்குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் இயற்கை பேரிடர் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக துணைக் குழுவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில்,கேரளாவை சேர்ந்த ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் விதமாக தான் பிரதான கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டது.

ஆனால், தற்போது துணை குழுவும் ஒன்று கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளதால் கண்காணிப்பு குழுவுக்கான அதிகாரங்கள் பிரித்து கொடுக்கப்படுகிறது. அதனால், துணைக் குழுவை கலைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக தான் உள்ளது என கடந்த வாரம் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: