பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!: பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்..!!

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகின்ற 14ம் தேதி திறக்கப்படுகிறது. மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, பிப்ரவரி மாதம் 12ம் தேதி திறக்கப்பட்டது. 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பிப்ரவரி 17ம் தேதி அடைக்கப்பட்டது. இந்நிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகின்ற 14ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 19ம் தேதி பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குவதை ஒட்டி தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார்.

திருவிழாவை ஒட்டி வழக்கமான பூஜைகளுடன் ஸ்ரீ பூதப்பலி, உத்சவ பலியும் கடைசி நாளான 28ம் தேதி பம்பையில் ஆறாட்டு விழாவும் நடைபெறுகிறது. அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பதால் இம்முறை பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாத பூஜை மற்றும் விழா நாட்களில் தினசரி 5,000 பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க திருவாந்தக்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Related Stories: