சோப்பு கட்டிக்குள் மறைத்து கடத்திய ரூ.35.7 லட்சம் தங்கம் பறிமுதல்: ஆசாமி கைது

சென்னை: துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக டில்லி புறப்பட்டு செல்ல தயாரானது. அதற்கு முன்பாக அந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் விமான ஊழியர்கள் ஈடுப்பட்டனர். அப்போது விமானத்தின் ஒரு சீட்டிற்கு அடியில் வைக்கப்பட்டிருந்த லைப் சேப்டி ஜாக்கெட் கலைந்து கிடந்தது. ஊழியர்கள் அதை எடுத்து சரியாக வைக்க முயன்றபோது, அதலிருந்து குளியல் சோப்பு கட்டி கீழே விழுந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அதனுள் தங்கக்கட்டி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து விமான ஊழியர்கள், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சோப்பு கட்டியை கைப்பற்றினர்.

விமானத்திற்குள் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குறிப்பிட்ட இருக்கையில் அமர்ந்து வந்த பயணி யார் என்பதை பயணிகள் சார்ட்டில் பார்த்தனர். அதில், மதுரையை சேர்ந்த வியாசர் அராபத் (22) என தெரிந்தது. அவர், குடியுரிமை, சுங்க சோதனைகளை முடித்துவிட்டு, இ-பாஸ் வாங்கும் வரிசையில் நின்றிருப்பது தெரிந்தது. உடனடியாக அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், சுங்கச்சோதனை கடுமையாக இருப்பதை கேள்விப்பட்டு, சோப்பு கட்டிக்குள் மறைத்து கடத்தி வந்த தங்கத்தை விமானத்திலேயே மறைத்து வைத்துவிட்டு இறங்கியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து, சோப்பு கட்டிக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.35.7 லட்சம் மதிப்புடைய 730 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: