சாராயம் என நினைத்து வலையில் சிக்கிய பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த 3 மீனவர்கள் பலி: வேதாரண்யம் அருகே சோகம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இந்த மீன்பிடி சீசன் காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் இங்கே தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி மதியம் கோடியக்கரையில் இருந்து பாம்பன் பகுதியை சேர்ந்த ஜான் (48) என்பவரின் விசைப்படகில் அவரும், பாம்பனை சேர்ந்த செல்வேந்திரன்(48), தோமஸ்(58), அந்தோணி(42), வினோத்(38), போஸ்(40) ஆகியோரும் தங்கி மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடித்து கொண்டிருந்த போது வலையில் சிக்கிய மூன்று லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவம் நிறைந்த பாட்டிலை எடுத்துள்ளனர். பின்னர் அதை மற்றவர்களுக்கு தெரியாமல் அந்தோணி, வினோத், போஸ் ஆகிய மூவரும் சாராயம் என்று நினைத்து குடித்து விட்டு பாட்டிலை கடலில் வீசி விட்டனர்.

சிறிதுநேரத்தில் மூன்று பேரும் படகிலேயே தூங்கி விட்டனர். நேற்று அதிகாலை கரை திரும்பும்போது அவர்களை மற்ற மீனவர்கள் எழுப்பியபோது அந்தோணி இறந்து கிடந்ததும், வினோத், போஸ் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்ததும் தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மற்ற மீனவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் வினோத், போஸ் ஆகியோரை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரையும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போஸ், வினோத் ஆகியோரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலையில் சிக்கிய மூன்று லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவம் நிறைந்த பாட்டிலை எடுத்து. சாராயம் என்று நினைத்து குடித்தனர்.

Related Stories:

>