உள் இட ஒதுக்கீடை கண்டித்து வெடிக்கும் போராட்டம் ‘அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க...’மக்கள் காலில் விழுந்து வேண்டுகோள்

* சீர்மரபினர் வீடு, வீடாக சென்று பிரசாரம்

* துணை முதல்வர் மாவட்டத்தில் பரபரப்பு

உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என சீர்மரபினர் நலச்சங்கத்தினர் பொதுமக்கள் காலில் விழுந்து பிரசாரம் செய்வது ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்தில் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் தங்களுக்கு டிஎன்டி பழங்குடியினர் என சான்றிதழ் வழங்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்றிட வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார் ஆகியோரிடம் நேரில் சென்று மனுக்களையும் அளித்தனர். ஆனால், அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், சமூக நலச்சங்கங்கள் சார்பில் அரசைக் கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தை 68 சீர்மரபினர் நலச்சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கம்பம், உ.அம்மாபட்டி, சின்னமனூர் பகுதிகளில் இச்சங்கத்தினர், கருப்புக்கொடி ஏந்தி ஒவ்வொரு வீடாகச் சென்று தங்களது சமுதாயத்தினர் காலில் விழுந்து அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி வருகின்றனர். எதிர்ப்பு பிரசாரம் செய்வதற்கான காரணம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி வருகின்றனர். கம்பம் சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டத்திலேயே அதிமுகவிற்கு எதிராக கிளம்பியுள்ள எதிர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>