100 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை தொடங்கியது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காக டி.கே.சிவகுமார் 100 சட்டப்பேரவை தொகுதிகளில் மேற்கொள்ளும் மக்கள் குரல் பாதயாத்திரை பெங்களூரு தேவனஹள்ளியில் நேற்று தொடங்கியது. மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வியடைந்த 100 தொகுதிகளில் மக்கள் குரல் என்ற பாதயாத்திரை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை 8.30 மணிக்கு பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து திறந்த வேனில் தேவனஹள்ளியை நோக்கிய தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்றார்.

முன்னதாக விவசாயிகள் போல் பச்சை சால்வை அணிந்து, ஏர்கலப்பையுடன் சிவகுமார் இருந்தார். அவர் கையில் வைத்திருந்த கலப்பையை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் ஒப்படைத்தார். அவர் வாங்கி கொண்டுபின் தேவனஹள்ளி சட்டப்பேரவை தொகுதியை நோக்கி இருவரும் ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னால் வாகனத்தில் கட்சியின் மாநில செயல்தலைவர்கள் ராமலிங்கரெட்டி, துருவநாராயண், சலீம்அமகது, ஈஸ்வர்கண்ட்ரே உள்ளிட்ட தலைவர்கள் சென்றனர். காலை 9.30 மணிக்கு தேவனஹள்ளியில் உள்ள வேணுகோபாலசுவாமி கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர். பின்னர் திப்புசுல்தான் சமாதிக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

காலை 10.30 மணிக்கு கோகுல ஓட்டல் அருகில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் டி.கே.சிவகுமார், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் துணைமுதல்வர் பரமேஸ்வர், மாநில செயல்தலைவர் ராமலிங்கரெட்டி, முன்னாள் அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா, ஒசகோட்டை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ சரத்பச்சேகவுடா ஆகியோர் பேசினர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியதுடன் வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதேபோல் மாநில பாஜ அரசு ெகாண்டுவந்துள்ள நில சீர்த்திருத்த சட்டம், ஏபிஎம்சி சட்ட திருத்தம் மற்றும் பசுவதை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தினர். மேலும் கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நிவாரண வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Related Stories:

>