ஊரடங்குக்கு பின்னர் படிப்படியாக உயர்வு: மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை 35 சதவிகிதம் அதிகரிப்பு: மெட்ரோ நிர்வாகம் தகவல்

பெங்களூரு: கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை சுமார் 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவில்லை. தொடர்ந்து ஜூன் முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அப்போது மெட்ரோ ரயில் இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் விளைவாக ரயில் நிர்வாகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் ரயில் சேவையை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தொடர்ந்து பலகட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுப்பாடுகளுடன் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. கொரோனா தொற்றுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கு சுமார் 4.5 லட்சம் பேர் நம்ம மெட்ரோவில் பயணம் செய்தனர். ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்னர்  அக்டோபரில் 47 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். நவம்பரில் 65 ஆயிரம் பேரும், டிசம்பரில் 93 ஆயிரம் பேரும், 2021-ம் ஆண்டு ஜனவரியில் 1.15 லட்சம் பேர் என படிப்படியாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த மாதம் 35 சதவீதம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 1.78 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இருப்பினும் டோக்கன் முறையை மீண்டும் அறிமுகப்படுத்த அதிகாரிகளுக்கு உடனடி திட்டம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டோக்கன் முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவது தினசரி பயணத்தை 10-20 சதவீதம் அதிகரிக்கும் என்று நம்பினாலும் பிஎம்ஆர்சிஎல்  தற்போது கோவிட்-19 இன் இரண்டாவது அலையின் பின்னணி மற்றும் உருமாற்று கொரோனா தொற்றால் டோக்கன்களை வழங்குவது குறித்து யோசிக்கவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் நடுத்தர மற்றும் வெளியூர் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களால் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும் மற்றவர்களால் ரயிலில் பயணிப்பது கடினம். எனவே டோக்கன்களை உடனே வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: