அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம்

விருதுநகர் : அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தொ.மு.ச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எஸ்டிடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் இரண்டு என 8 பணிமனைகளில் 237 டவுன்பஸ்கள், 181 நீண்ட தூர பஸ்கள் என 418 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 2,724 பணியாளர்கள் 8 பணிமனைகளிலும் பணியாற்றுகின்றனர்.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் மாவட்டத்தில் 8 பணிமனைகளில் 15 முதல் 20 சதவீத பஸ்கள் மட்டும் ஆளும் கட்சி சங்கங்களின் தொழிலாளர்கள், தற்காலிக ஊழியர்கள், ஆட்டோ, வேன், கார், பள்ளி, கல்லூரி வேன் ஓட்டுநர்களை வைத்து இயக்குகின்றனர். மேலும் ஒரு டிரைவரை வைத்து டிப்போவில் இருக்கும் பஸ்களை கொண்டு வந்து பஸ் ஸ்டாண்டுகளில் நிறுத்தி அனைத்து பஸ்களும் ஓடுவதாக பொய் கணக்கு காட்டி வருகின்றனர்.

அரசு பஸ்கள் முழுமையாக  ஓடாத நிலையில் பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதை பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். விருதுநகர்-திருமங்கலத்திற்கு ரூ.30க்கு பதில் ரூ.35 கட்டணம் வசூலிக்கின்றனர்.

Related Stories: