சட்டப்பேரவை கூட்டுக் கூட்டத்தில் பேச வந்த இமாச்சல் ஆளுநரை தாக்க முயற்சி: 5 காங். எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட்

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வந்த ஆளுநரை தாக்க முயன்றதாக காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் பட்ஜெட் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் காலை 11 மணியளவில் தொடங்கியது. ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவின் உரையின்போது எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னி கோத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையேற்றம் குறித்து ஆளுநர் பேசவில்லை என்றும், ஆளுநரின் உரையை பொய் மூட்டை என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால், ஆளுநர் தனது உரையை விரைவாக முடித்து விட்டு அவையிலிருந்து கிளம்பினார். அப்போது,  அவருக்கு அருகில் வந்த அக்னி கோத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அவரை வெளியே போகவிடாமல் தடுத்தனர்.

அப்போது, அவரை தாக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் விபின் பர்மரிடம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னி கோத்ரி உள்ளிட்ட 5 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை பட்ஜெட் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்  செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.  இந்த சம்பவத்தால் இம்மாநில சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>