பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுவரில் சித்திரம் வரையும் போட்டி

பாடாலூர் : ஆலத்தூர் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகளில் கொரோனா அச்சத்தை போக்க, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுவர் சித்திரம் வரையும் போட்டி நடத்தப்பட்டது.ஆலத்தூர் ஒன்றியம் விஜயகோபாலபுரம், திருவளக்குறிச்சி, திம்மூர், வரகுபாடி, சிறுகன்பூர், சாத்தனூர், மாக்காய்குளம், மேத்தால், ராமலிங்கபுரம், அல்லிநகரம், கீழமாத்தூர், இலந்தங்குழி(மே), புது அம்மாபாளையம், நாட்டார்மங்கலம், மருதடி, புதுவிராலிப்பட்டி, சிறுவயலூர், கண்ணப்பாடி, பிலிமிசை மற்றும் நொச்சிக்குளம் உட்பட 20 அரசு நடுநிலை பள்ளிகளில் சுவர் சித்திரம் வரையும் போட்டி நடத்தப்பட்டது.

அதில் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு குறித்த சுவர் சித்திரங்கள் மூலம் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்த சுற்றுச்சூழல் கேடு, சுகாதார கேடு, புத்தகம் படிப்போம், புதியதோர் உழவு செய்வோம், மாசு தவிர்ப்போம், அவனியைக் காப்போம், நன்றாய் கைகளை கழுவு, ஒன்றாய் இருப்பதிலிருந்து நழுவு மற்றும் இஞ்சி, மஞ்சள், சுக்கு, இயற்கை கவசம் நமக்கு உட்பட மொத்தம் 28 தலைப்புகளில் முதலில் பள்ளியளவில் அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் வீட்டிலிருந்தே ஓவியங்களை பேப்பரில் வரைய வைத்து, அதில் நன்றாக வரைந்த மாணவர்கள் 5 பேர் தேர்ந்தெடுத்து அவர்களை பள்ளிகளுக்கு வரவழைத்து அவரவர் பள்ளிகளின் சுவர்களில் வண்ண பெயிண்ட் மூலம் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

அதிலிருந்து 3 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.600, ரூ.500, ரூ.400 வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர்கள் இளங்கோவன், சாந்தப்பன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், ஆசிரியப் பயிற்றுநர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் ஆகியோர் மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

Related Stories: