தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை-185 வியாபாரிகளுக்கு அபராதம்

கோவை :  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக கோவையில் 185 வியாபாரிகளுக்கு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை மீறி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு  மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் அன்னதானம் நடைபெறும் கோவில்களில் உணவுகளை கையாள்பவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் 60 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அவர்களுக்கு உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை அறிந்து கொள்ளுதல், சமைத்தல், வினியோகம் என அனைத்திலும் சுகாதாரத்தை கடைபிடிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் கீழ் வழங்கப்படும் தரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவில், மருதமலை முருகன் கோவில், கோனியம்மன் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சுகாதார தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக இதுவரை 185 சில்லறை வியாபாரிகளுக்கு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு வியாபாரிக்கு 2வது முறையாக புகையிலை பொருட்கள் விற்றதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும், பிளாஸ்டிக் பயன்படுத்திய 48 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.96 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: