பாஸ்டேக் கேட்டதால் ஆத்திரம் ஆத்தூர் சுங்கச்சாவடி சூறை: தேமுதிகவினர் 3 பேர் கைது

சென்னை: அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் காரில் வந்த தேமுதிகவினரிடம் பாஸ்டேக் கேட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள், சுங்கச்சாவடி பூத்களை அடித்து உடைத்தனர். இதுதொடர்பாக போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் நேற்று மாலை  தேமுதிகவை சேர்ந்தவர்கள், திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி 2 கார்களில் சென்றனர். ஆத்தூர் சுங்கச்சாவடியில் சென்றபோது, தேமுதிகவினரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் பாஸ்டேக் கேட்டுள்ளனர். அப்போது, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், காரில் வந்த தேமுதிகவினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரடைந்த தேமுதிகவினர், காரில் இருந்து இறங்கி 9 மற்றும் 10ம் எண் வழித்தடத்தில் இருந்த பூத்களை கட்டைகளால் அடித்து உடைத்தனர். தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பு (26), மதன் (25), வேந்தன் (27) ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்கள் தப்பிவிட்டனர். பிடிபட்டவர்களிடம், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: