விவசாயிகள் போராட்டத்தில் டூல் கிட் வழக்கில் கைதான திஷா ரவிக்கு ஜாமீன்.. ரூ.1 லட்சம் பிணைத் தொகை செலுத்தவும் உத்தரவு!!

டெல்லி : விவசாயிகள் போராட்டத்தில் டூல் கிட் வழக்கில் கைதான பெங்களூரை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கடந்த மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி மேற்கொண்டனர். அப்போது ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு செங்கோட்டை கோபுரத்தில் விவசாய சங்க கொடிகளை ஏற்றினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் டூல்கிட் லிங்க் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்த டூல்கிட்டை உருவாக்கியது பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி மற்றும் மேலும் இருவர் என குற்றம்சாட்டிய போலீசார், அவரை கைது செய்து, தேசத்துரோகம் மற்றும் சதிச்செயல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தது. 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அதன்பின்னர் நேற்று மீண்டும் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். ஒரு நாள் அவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதற்கிடையே திஷா ரவி தரப்பில் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், திஷா ரவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் உள்ளது? ஜனவரி 26ல் நடந்த வன்முறைக்கும் டூல்கிட்டுக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் ஏதாவது உள்ளதா? என கேள்வி எழுப்பியது. திஷா தரப்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால், திஷா ரவிக்கும் காலிஸ்தான் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதாடினார். சீக்கியர்களுக்கான நீதி அமைப்புடன் அவர் தொடர்பில் இல்லை என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.அதன்படி இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். டூல்கிட் வழக்கில் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதோடு இரு நபர் உத்தரவாதத்துடன் தலா ரூ.1 லட்சம் செலுத்த உத்தரவிட்டுள்ளது .

Related Stories: