நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சுமார் ஓராண்டுக்குப் பிறகு விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

நேரு- விவசாயிகள் சங்கம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவியது. அதனைக் கணக்கில் கொண்டு பயிர்க்கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய குழு அமைத்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.60 வசூல் செய்யப்படுவது எதற்காக எனத் தெரியவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 தடுப்பணைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 2 தடுப்பணை பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

வெங்கடாபுரம், வெங்குடி பகுதிகளிலும் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சேகர், விவசாயி : விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை எடுக்கின்றனர். எனவே, தானிய தரகு மண்டி வியாபாரிகளை அழைத்துப்பேசி குறிப்பிட்ட விலைக்கு குறையாமல் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மரம் மாசிலாமணி : விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் அதிக அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தையில் கிடைக்கும் களைக்கொல்லியை பயன்படுத்தினால் சுமார் 35 நாட்களுக்கு அந்த இடத்தில் புல், பூண்டு எதுவும் முளைப்பதில்லை. இதனால் மண்தன்மை மாறி மலடாகிறது. எனவே, களைக்கொல்லியை ஆய்வு செய்ய வேண்டும். திருவேங்கடம்,

விவசாயி : தென்னை மரங்களில் தற்போது பூச்சித் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதற்கு உரிய மருந்து விவசாயிகளுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமுக்கூடல் பாலாற்றுப் பாலத்தின் 2 பக்கமும் சுமார் இரண்டரை அடி அளவுக்கு மணல நிரம்பி உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், இடுபொருள்கள், உரங்கள் எடுத்துச் செல்லும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த மணலை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விவேகானந்தன்,

விவசாயி : முசரவாக்கம் பகுதியில் எண்ணெய் வித்துக்களான கடலை மற்றும் வாழை, தென்னை மரங்களை காட்டுப் பன்றி நாசம் செய்கிறது. வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கயும் எடுக்கவில்லை என்றார்.

லட்சுமணன் : பரவலாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காட்டுப் பன்றியின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் நீர் பாய்ச்ச செல்லும் பெண்கள் உட்பட அனைவருக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்ததாவது: விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்வது மட்டுமின்றி விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம் அடைய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை எடுத்துக் கூறும் வகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாதாந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.  

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை, நல்ல விலைக்கு விற்கும் வகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தேவைக்கேற்ப திறக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள பிரச்சினைகள் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு அரசு ஒத்துழைப்பு தருவதுபோல், விவசாயிகளும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். இந்தக் கூட்டத்தில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நடராஜ குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை ) கணேசன், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: