மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் எழுச்சி மாநாடு ஊழலை மறைப்பதற்கே அதிமுக-பாஜ கூட்டணி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மதுரை: ஊழலை மறைப்பதற்காகவே அதிமுக, பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை வண்டியூர் ரிங்ரோட்டில் அரசியல் எழுச்சி மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் டி.ராஜா துவக்க உரையாற்றினார். தலைவர்கள்  நல்லகண்ணு, தா.பாண்டியன், சி.மகேந்திரன் முன்னிலை வகித்தனர். மாநாட்டில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இது இந்திய கம்யூனிஸ்ட் மாநாடாக இருந்தாலும், திமுக மாநாட்டில் கலந்துகொள்வது போன்ற அதே உணர்வோடுதான் உள்ளேன். நாம் ஒரே கொள்கையோடு உள்ளவர்கள் என்ற பாசத்தால் இங்கே ஒன்றிணைந்துள்ளோம். திராவிட இயக்கம் இல்லையெனில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஏற்றுக் கொண்டிருப்பேன் என கலைஞர் கூறியுள்ளார். திமுகவும், கம்யூனிஸ்ட் இயக்கமும் அரசியல் ரீதியில் மட்டுமல்ல. தத்துவ அடிப்படையிலும் நெருக்கமாக உள்ளது.

வரும் தேர்தல் லட்சியத்திற்கான, ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். கொள்ளை கூட்டத்தினரிடம் ஆட்சியை பறித்து, கொள்கை உடையோரிடம் ஆட்சி வரவேண்டும். அதிமுக மூலம் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது பாஜ. தனது ஊழலை மறைக்க அதிமுக, பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் கைகளை மோடி உயர்த்தியுள்ளார். ஊழல் கரங்களை உயர்த்தி ஊழலுக்கு உதவி செய்வதை வெளிப்படுத்தியுள்ளார். மோடியின் ஒரு கரம் காவி, மறுகரம் கார்ப்பரேட். அதோடு ஊழலையும் கரம் கோர்த்துள்ளார்.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்த மோடி அவ்வையார் பாடலை கூறலாமா? மோடி ஆட்சியில் ஆண்டுதோறும் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. மோடி ஆட்சியில் சொந்த நாட்டு மக்கள் மீதே, பொருளாதார தாக்குதல் நடத்தப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை, சமையல் காஸ் விலை உயர்வுதான் மோடி அரசு தொடர்ந்து மக்களுக்கு தரும் பரிசு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் பெட்ரோல் விலை உயர்கிறது. பெட்ரோல் விலை உயர்வால் காய்கறி, போக்குவரத்து கட்டணம் என  அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயரும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கூட தட்டி கேட்கமுடியாத அரசாக மாநில அரசு உள்ளது. கல்வி, வேளாண்மை, மின்சாரம், தமிழ் வளர்ச்சி ஆகியவற்றில் மாநில அரசின் உரிமை தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திராவிடர் கழக நிர்வாகி பூங்குன்றன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.  கட்சியின் மாநில துணைச்செயலாளர் சுப்பராயன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் நன்றி கூறினார்.

திமுக கூட்டணியை ஆதரிக்க தீர்மானம்

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் இறந்த 200 விவசாயிகள் மறைவுக்கு மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தை தனித்துவத்தோடு மீட்டெடுக்க, வளமார்ந்த தமிழகம் உருவாக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: