கார்ப்பரேட்டை காக்க ஏழைகளை வதைக்கும் மோடி அரசு: பங்காருபேட்டை எம்எல்ஏ காட்டம்

தங்கவயல்: ஏழை, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் வகையில், சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் விலைகளை ஏற்றி அதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் விஷம் போல் உயர வழி செய்துள்ள பாஜ மோடி அரசு, அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகள் வளம் பெற பொது துறை நிறுவனங்களை அவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கிறது என்று பங்காருபேட்டை காங்கிரஸ் எம்எல்ஏ நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறும் போது, நாட்டின் பொது துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எல்.ஐ.சி.  பி. இ.எம்.எல்., உள்பட பல்வேறு பொது துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மறுபுரம் ஏழை எளிய நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகளை இதுவரை இல்லாத அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசிய, மளிகை பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில், இந்த விலையேற்றம் பொது மக்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பி.பி.எல்.ரேஷன் அட்டை, வீடுகளில் டி.வி., டூவீலர், பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு மட்டுமே என்று மேலும் அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. அன்றாட கூலி தொழிலாளி வீட்டில் கூட தவணை முறையில் வாங்கிய டி.வி.பிரிட்ஜ், டூவீலர் உள்ளது. அதனால் கூலி தொழிலாளிகள் எல்லாம் செல்வந்தராக முடியாது. எனவே இந்த முடிவை அரசு திரும்ப பெற வேண்டும். அதே போல் காஸ், பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். இது தொடர்பாக கோலார் மாவட்ட அளவில் காங்கிரஸ் கட்சி கண்டன போராட்டத்தை நடத்த உள்ளது”என்றார்.

Related Stories: