முறைகேடு செய்தவர்களுக்கு துணை போனதாக மாநகராட்சி ஊழியர்கள் 10 பேர் மீது லோக் ஆயுக்தாவில் புகார்

பெங்களூரு: பெங்களூரு சந்திரா லே அவுட் துணை மண்டலத்தில் நடந்த முறைகேட்டிற்கு துணை போனதாக 10 மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு சந்திரா லே அவுட் துணை மண்டலத்தில் 35 கோடி செலவில் 48 வளர்ச்சி திட்ட பணிகள் நடந்தது. ஆனால் அந்த பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும், குத்தகைதாரர்கள் பல லட்சம் ரூபாய் சுருட்டிவிட்டு, அலட்சியமாக பணிகளை முடிந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் விசாரணை நடத்தப்பட்டு பி.டி.சி.சி அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களும் மாநகராட்சி ஊழியர்களுக்கு கிடைத்தது. ஆனால் குத்தகைதாரர்களிடம் பணம் வாங்கி கொண்டு, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனை ஆர்.டி.ஐ ஆர்வலர் அமரேஷ் என்பவர் கண்டுபிடித்து, யார் யார், இந்த மோசடியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் யார் யார் என்ற விவரங்களை சேகரித்தார். அதில் மாநகராட்சி ஊழியர்கள் 10 பேருக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்த அமரேஷ், உடனே இது குறித்து லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார். மாநகராட்சி சார்பில் 35 கோடி செலவில் நடந்த 48 பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டிற்கு குத்தகைதாரர்கள்தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று, மாநகராட்சியில் புகார் அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக கூறிய மாநகராட்சி ஊழியர்கள், லஞ்சம் வாங்கி கொண்டு, புகார் மனுவை கிடப்பில் போட்டுவிட்டனர். எனவே சம்பந்தப்பட்ட 10 மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று லோக் ஆயுக்தாவிற்கு வழங்கிய புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: