டூல்கிட் வழக்கு விவகாரத்தில் திசா ரவி கைதுக்கு விளக்கம் கேட்டு டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ்: டெல்லி பெண்கள் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: திசா ரவியை கைது செய்தபோது, அவரை நீதிமன்றத்தில் வக்கீலின் துணையின்றி ஆஜர்படுத்தியது ஏன் என்பது பற்றி விளக்கம் கேட்டு டெல்லி போலீசாருக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி  எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சுவிட்சர்லாந்தை  சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் சமீபத்தில் டிவிட்டரில்  கருத்து வெளியிட்டார். அத்துடன் ‘டூல்கிட்’ ஒன்றையும் அவர்  இணைத்திருந்தார். போராட்டங்கள் நடத்தும்போதும் அதில் பங்கேற்பவர்கள்  செய்யவேண்டிவை குறித்து விவரிக்கும் ஆவணம் தான் இந்த  ‘டூல்கிட்’  என்பதாகும். இந்த டூல்கிட் இந்திய  அரசுக்கு எதிராக செயல்பட விரும்பும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி  என்றும் கிரெட்டா தன்னுடைய பதிவு மூலம் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை  தூண்டும் சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்றும் டெல்லி காவல்துறை  வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார்  கடந்த சனிக்கிழமையன்று பெங்களூருவில் 21 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா  ரவியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். அதன்பின் 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த  விவகாரத்தில் திசா ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகையில் அவருக்கான  வக்கீல் யாரும் உடன் இல்லாத நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  நீதிபதியின் கேள்விகளுக்கு திசா ரவி உடைந்து அழுது அவரே பதிலளித்தார். இது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியானது. இந்நிலையில், பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் டெல்லி மகளிர் ஆணையம் திசா ரவி கைது விவகாரத்தில் விவரங்களை கேட்டு டெல்லி போலீசாருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:  

பத்திரிகைகளில் வந்த செய்திகளின் படி, திசா ரவை கைது செய்யப்பட்ட பின் அவரது விருப்பப்படி வக்கீல் வைத்துக்கொள்ள அனுமதி தராமல் தனியாகவே நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதோடு, அவரை கைது செய்த பின் அவரை எங்கே அழைத்து செல்லப்படுகிறார்? எங்கு உள்ளார் என்கிற விவரங்களை  அவரது பெற்றோருக்கு கூட போலீசார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் மேற்கண்ட புகார்களுக்கு விளக்கம் அளிப்பதோடு, டூல்கிட் வழக்கின் எப்ஐஆர் நகல்களையும் சமர்ப்பிக்குமாறு ஆணையம் டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வாறு ஆணையம் தெரிவித்துள்ளது.

வக்கீல் இன்றி திசா ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டெல்லி போலீசார் ஏற்கனவே நேற்று முன்தினம் விளக்கம் ஒன்றை அளித்தனர். கமிஷனர் ஶ்ரீவத்சவா இதுபற்றி கூறுகையில், ”மும்பையை சேர்ந்த வக்கீல் நிகிதா ஜேக்கப் மற்றும் புனேவை சேர்ந்த இன்ஜினியர் சாந்தனு முலுக் உடன் இந்தியா மற்றும் மத்திய அரசுக்கு  எதிராக செயல்பட்டு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் திசாரவி. மேலும், டூல்கிட்டை எடிட் செய்து மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இந்த டூல்கிட்டை டெலிகிராம் செயலி மூலம் கிடே்டா தன்பெர்க்கிற்கு அனுப்பியுள்ளார்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே காலிஸ்தான் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். குடியரசு தினத்திற்கு முன்னதாக ஜூம் மீட்டிங்களில் கலந்து கொண்டுள்ளனர். திசா ரவி கைது செய்யப்பட்ட விவாகரத்தில் அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்பட்டது. இவ்வாறு விளக்கம் அளித்து இருந்தார். எனினும், இதன்பின்னர் தான் டெல்லி போலீசாரடம் விளக்கம் கேட்டு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: